மக்கள் சேவைக்காக 'கியூ ஆர்' குறியீடு செயலி : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
 

By 
qr

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான "விரைவு துலங்கல் குறியீடு 'கியூஆர்' கோடு மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார்.

மேலும், ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு 'செழிப்பு' என பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார். இந்த விரைவு துலங்கல் குறியீடு (கியூஆர் குறியீடு) ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும்.

இந்த விரைவு துலங்கல் குறியீடு மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறை குறைகளை தெரிவிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியினை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.

மேலும், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலி மூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டில் இருந்தவாறே விரைவு துலங்கல் குறியீடு (கியூஆர் குறியீடு) ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.

இவ்வாறு பெறப்படும் புகார், கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலைப்பற்றியும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 
 

Share this story