தொழில் முனைவோர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்..

By 
mks4

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அரசு, கட்சி விழாக்களில் பங்கேற்று வருகிறார். இதில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

நேற்று காலை கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.588 கோடி மதிப்பில் 1லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற 229 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் மாலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் மாற்று கட்சியினர் உள்பட 55ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பொள்ளாச்சி நிகழ்ச்சி முடிந்ததும் மு.க.ஸ்டாலின் இரவு திருப்பூர் வந்து தங்கினார். திருப்பூரில் இன்று காலை நடைபெற்ற தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில் முனைவோருக்கான திருப்பூர் மண்டல மாநாடு இன்று காலை நடைபெற்றது. மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் வரவேற்றார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதன்படி தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், ரூ.100 கோடி மதிப்பில் பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், ரூ.15.34 கோடி மதிப்பிலான திருப்பூர் நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

மேலும் கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22கோடி மதிப்பில் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டிடப்பணி, ரூ.18.13 கோடி மதிப்பில் கோவை சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை கட்டிடப்பணி ( கொசிமா), ரூ. 24.55 கோடி மதிப்பில் அரியாகவுண்டன்பட்டி வெள்ளி கொலுசு பொது வசதி மையம் கட்டிடப்பணி என ரூ.180 கோடி மதிப்பிலான கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக சிறு, குறு, நடுத்தர தொழில் செய்யும் வியாபாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட தொழில் திட்டங்கள், நிறைவேற்றப்பட உள்ள தொழில் திட்டங்கள் குறித்து மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார். தொழில் முனைவோர்கள் பலர் பனியன் தொழில் உற்பத்திக்கு மூலப்பொருளான பஞ்சு, நூல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்ச்சியில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்றனர். இணைய வழி மூலமும் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மாலை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வந்தார்.

குமார் நகரில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின் இன்று காலை திருமுருகன்பூண்டி பப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை 9.50 மணிக்கு குமார் நகரில் இருந்து காரில் திருமுருகன்பூண்டிக்கு புறப்பட்டார்.

வழியில் 60 அடி ரோடு , எஸ்.ஏ.பி.தியேட்டர் பெரியார்காலனி, அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர் நால்ரோடு ஆகிய இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர் குமார்நகரில் இருந்து திருமுருகன்பூண்டி வரை சுமார் 10 கி.மீ., தூரம் வழிநெடுகிலும் கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். இதனால் பொதுமக்கள் வெள்ளத்தில் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனம் தவழ்ந்து சென்றது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் பயணித்த சாலைகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Share this story