உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கு, தமிழக இளம் வீராங்கனை நிவேதா கோச்சராக நியமனம் : அவர் கடந்து வந்த பாதை..

By 
junior

17 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது.

இந்த போட்டி அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புவனேஸ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

லீக முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, மொராகோ, பிரேசில் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிவேதா தாஸ் இடம் பெற்றுள்ளார். உதவி பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து 30 வயதான நிவேதா தாஸ் கூறியதாவது:-

நான் காஞ்சீபுரம் அரசு பள்ளியில் படித்த போது கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடி இருக்கிறேன்.

தென் மண்டல போட்டியில் தமிழக அணிக்காக ஆடி தங்கம் வென்று உள்ளேன். கால்பந்து ஆடிக் கொண்டிருக்கும் போதே நான் பயிற்சியாளருக்கான படிப்பையும் முடித்தேன்.

உடற் கல்வி ஆசிரியர் தனலட்சுமி எனக்கு சரியான பாதையை காட்டினார். இதனால் நான் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தேன். கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டேன்.

17 வயதுக்குட்பட்ட உலக கோப்பை போட்டிக்கான இந்திய மகளிர் அணிக்கு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் மூலம் எனது கனவு நனவானது. இவ்வாறு நிவேதா தாஸ் கூறியுள்ளார்.

Share this story