ஆசிய கோப்பை கிரிக்கெட் டுடே: இந்தியா- ஹாங்காங் மோதல்; ஆடுகள நிலவரம்..

By 
asian1

15-வது ஆசிய கோப்பையை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

ஷார்ஜாவில் இன்று நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்துக்கும் அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

வங்காளதேசம் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. துபாயில் நாளை நடைபெறும் 4-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணிகள் மோதுகின்றன. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. இதனால் பலவீனமான ஆங்காங்கை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தார். ஜடேஜா பேட்டிங்கிலும், புவனேஸ்வர் குமார் பந்து வீச்சிலும் சாதித்தனர். முதல் போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் ரோசித்சர்மா வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப்பண்ட், தீபக் ஹூடா, அஸ்வின், பிஷ்னோய் ஆகியோருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்தியா-ஆங்காங் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

ஒருநாள் போட்டியில் 2 முறை விளையாடி உள்ளன. இந்த 2 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி விஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Share this story