திமுக அமைச்சர்களைப் போல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, தப்பிக்கப் பார்க்க மாட்டோம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

By 
eps22

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் துயர் துடைக்க, வருகிற 16-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

ஏற்கனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது இந்த விடியா தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது.

இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது. தி.மு.க. அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள தி.மு.க. அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் தி.மு.க. அமைச்சர் கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா?

எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது.

ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடு பொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா தி.மு.க. அரசு, மீண்டும் குறுக்கு வழியில் தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. தி.மு.க. மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this story