5 வகை நந்திகள் : புராண நிகழ்வுகள்..

By 
nandi

சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர், நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதனை 'பஞ்ச நந்திகள்' என்பார்கள். அது பற்றி இங்கே பார்க்கலாம். 

போக நந்தி :

ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவனே போக நந்தி ஆவான். போகநந்தி அல்லது அபூர்வ நந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது, கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும். 

பிரம்ம நந்தி :

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இதனை `பிரம்ம நந்தி' என்பார்கள். இந்த நந்தி, சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும். 

ஆன்ம நந்தி :

பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்தியையே, 'ஆன்ம நந்தி' என்கிறோம். இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது. 

மால்விடை :

மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது, கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும். 

தரும நந்தி :

இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி காலத்தின் முடிவில், உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.

Share this story